
கடந்த மார்ச் 5 (05/03/2018) ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் சிலை திறப்பு விழாவில், சினிமாவில் அரசியல் பேசிக் கொண்டிருந்த ரஜினி அவர்கள் முதன்முதலாக பொதுமேடையில் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்ற பேச்சு, அனைவருக்கும் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையை கொடுத்தது. அந்த பேச்சில் மிகவும் எளிமையாகவும், தெளிவாகவும் தன் கருத்தை பதிவுசெய்தார்.
தூத்துக்குடி போராட்டத்தில் 13 அப்பாவி பொதுமக்கள் துப்பாக்கி சூட்டில் இறந்தார்கள். அந்தப் போராட்டத்தில் படுகாயமடைந்தவர்களை பார்ப்பதற்காக தூத்துக்குடி சென்று பார்த்து விட்டு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும்போது எதற்கெடுத்தாலும் தமிழ்நாட்டில் போராட்டம் நடந்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறும் என்று மிகவும் கடுமையாக தன்னுடைய கருத்தை பதிவு செய்தார்.
அந்தக் கருத்து அவருக்கு எதிராக மாறியது. ரஜினியை வெளிப்படையாக விமர்சனம் செய்யாதவர்களும் இந்த கருத்தை கடுமையாக விமர்சித்தார்கள். இது அவருடைய அரசியல் ஆசைக்கு மிகவும் பின்னடைவாக மாறியது. அரசியல் ஒரு ஆபத்தான விளையாட்டு என்பதை உணர்ந்து, அதன் பிறகு அவர் அரசியல் கருத்து தெரிவிப்பதில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
போராட்டத்தினால்தான் தன் உரிமையை நிலைநாட்ட முடியும் என்ற கருத்தை தன்னுடைய படமான காலாவில் ரஜினி சொல்லி இருப்பார்.
அன்மையில் யார் பலசாலி என்று தன்னுடைய பேட்டிக்கு விளக்கம் கொடுக்கும் பேட்டியின் மூலம் இன்றும் நான் ஆட்சியில் இருப்பவர்களுக்கு நண்பன் என்ற பழைய கொள்கையில் இருந்து விலகாமல் இருக்கிறேன் என்று மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
கஜா புயலினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களை முதலமைச்சர் கனவில் உள்ள அனைவரும் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறி கொண்டிருக்கையில். ரஜினி அவர்கள் மட்டும் இன்னும் அந்த பக்கம் தலை காட்டவில்லை என்பது அனைவருக்கும் குறிப்பாக அவரின் ரசிகர்களுக்கு சந்தேகத்தை கொடுத்துள்ளது. அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னது இந்த தடவையும் தன் புது படத்துக்காக தான் இருக்குமோ என்ற சந்தேகம்.
ரஜினி அவர்கள் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆவார் என்று இன்றும் அவரின் ஆரம்பகால ரசிகனின் கனவாக இருக்கிறது. இதில் மிகவும் வருத்தமான செய்தி அவரின் பெரும்பாலான ரசிகர்கள் 50 வயதைத் தாண்டிவிட்டார்கள் என்பதுதான்.
போர் வரும்போது அரசியலுக்கு வருவேன் என்று 2017ஆம் ஆண்டு இறுதியில் அறிவித்து விட்டு, இன்று அரசியல் ஒரு ஆபத்தான விளையாட்டு என்று தமிழ்நாட்டில் அரசியல் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார் ரஜினி.
புது படங்களுக்காக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லவில்லை, இந்த தடவை கண்டிப்பாக ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவார் என்று அவரின் ரசிகனை போன்று நாமும் நம்புவோம்.