அனைவருக்கும்
உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
தி தமிழன்
தமிழர்களின் முதன்மையான தொழில் உழவுத் தொழிலாகும். வருடத்தில் தை மாதத்தில் நான்கு நாட்களை உழவர் திருநாளாக (பொங்கல்) தமிழர்கள் தொன்றுதொட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். பொங்கல் விழா தமிழர்களின் இனக்குழு தொடர்பான விழாவாக வரலாற்றில் பார்க்கப்படுகின்றது.
உழவர் திருநாள் நான்கு நாட்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
- முதல் நாளில், தான் வசிக்கும் இடத்தை சுத்தம் செய்வதை போகியாகவும்
- இரண்டாம் நாளில், தான் உழுது சேர்த்த உணவுப்பொருட்களை கொண்டு சமைத்து தன் குடும்பத்துடன் உண்டு மகிழ்வதை தைப்பொங்கலாகவும்
- மூன்றாம் நாளில், தன்னுடைய உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளைக் கொண்டாடுவதை மாட்டுப் பொங்கலாகவும்
- நான்காம் நாளில், தன்னுடைய கிராமத்தில் உள்ள உறவுகளையும், பெரியவர்களையும் கண்டு தன் மகிழ்ச்சியை பகிர்வதை காணும் பொங்கலாகவும்.
இப்படியாக நான்கு நாட்களை தமிழர்கள் ஒரு பெரும் திருவிழாவாக கொண்டாடுவதையே உழவர் திருநாள் (பொங்கல்) என்று அழைக்கப்படுகின்றது.
போகி
மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் பழையது கழிந்து புதியது தொடங்கும் என்பதை குறிக்கும் பொருட்டாக அன்றைய நாளில் வீட்டைச் சுத்தம் செய்து புதிய வண்ணங்களை அடித்து பழைய பொருட்கள் மற்றும் தேவைப்படாத பொருட்களை எரித்து விடுவார்கள். இதனை ஒரு கொண்டாட்டமாகக் கொண்டாடுவதையே போகி ஆகும்.
தைப்பொங்கல்
பெரும்பாலும் மார்கழியில் அறுவடை முடித்து புதிய உணவான அரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, வாழை போன்றவற்றை வைத்துச் சமைத்து உண்பதை தைப்பொங்கலாக கூறுவோம். பொங்கல் என்றால் கொதித்தல், முகுதல், சமைத்தல், செழித்தல் என பொருள்படும். இது தை மாதத்தில் நடைபெறுவதால் தைப்பொங்கல் என்று அழைக்கப்படுகின்றது.
மாட்டுப் பொங்கல்
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் விழா மாட்டுப் பொங்கல் விழா. அன்று, மாடுகளையும் அதன் இருப்பிடத்தையும் சுத்தம் செய்து தான் அறுவடை செய்த உணவைக் கொண்டு சமைத்து மாட்டுக்கு கொடுப்பார்கள்.
அது மட்டுமில்லாமல், மாடுகளை அலங்கரித்து தன் குடும்பத்துடன் கிராமத்தில் பொதுவான இடங்களுக்கு கொண்டுச்சென்று பொங்கலோ பொங்கல் மாட்டுப்பொங்கல் என்று கூறி மகிழ்வார்கள்.
காணும் பொங்கல்
காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாடத்தின் நான்காம் நாள் விழாவாகும். அன்று தன்னுடைய உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் ஆகும். அதுமட்டுமில்லாமல், பல்வேறு வீர சாகச விளையாட்டுப் போட்டிகளை தங்களுடைய கிராமத்தில் நடத்தி கொண்டாடுவார்கள். இதில் ஒன்று தான் சல்லிக்கட்டு விளையாட்டு.
உழவுத் தொழிலுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த உழவர் திருநாளை வடிவமைத்துக்கொண்டான் தமிழன். தமிழனின் சிறந்த வாழ்வியல் முறைக்கு இது ஒரு சான்று.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…
LikeLike