
நேர்பட பேசு, காலத்தின் குரல் என்கின்ற விவாத மேடைகளை தன்னுடைய தனித் திறமையினால் தொலைக்காட்சி விவாத மேடைக்கு என்று ஒரு தரத்தை கொடுத்தவர் குணா என்கின்ற குணசேகரன் அவர்கள். அவருடைய நேர்படப்பேச்சும் மற்றும் காலத்திற்கான சமூக அக்கறை இந்த இரண்டும் தான் பொது மக்களாகிய நமக்கு அவருடான நெருக்கத்தை அதிகமாக்கியது.
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளத்தில் அவரை சார்ந்தவர்கள் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் அனைவரும், அவருடைய தலைமைப் பண்புகளை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய மேற்பார்வையில் வளர்ந்த நிறுவனம் அவரை வெளியேற்றியதா அல்லது அவரே வெளியேறினாரா என்பது அவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால், இந்த நிகழ்வினால் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்னவென்றால், அவர் இதுவரை நேர்மையாக உழைத்த உழைப்புக்கும் மற்றும் புதியவர்களை அரவணைத்து போற்றியதற்க்கும் நற்சான்றுகள் பல அவருக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம், 25 வருட உழைப்புக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது அடுத்த 25 வருடம் அவர் எடுக்கும் புதிய முயற்சிக்கான திறவுகோலாக இருக்கும்.
அவருடைய தலைமைப் பண்புகளை அவருடன் பணியாற்றிவர்கள் விவரிக்கும் பொழுது, உண்மையில் தலைமை பண்புக்காண இலக்கணம் என்ன என்று நமக்கு புரிகிறது.
அவருடன் பணியாற்றிய பலர் அவரை பாராட்டுகிறார்கள். நானும் அவர்களுடன் பாராட்டுகிறேன், ஆனால் என்னுடைய பாராட்டு அவர்களின் பாராட்டைவிட மிகவும் வலிமையானது. ஏனென்றால், நான் அவருடன் ஒன்றாக பணியாற்றியதில்லை, அவருடன் நெருங்கி பழகியதும் இல்லை. ஆனால் எனக்கும் அவருக்கும் ஒரு விரல் தொடர்பு இருக்கிறது.

நான் எழுதிய குழந்தைகளின் எதிர்காலம்… கட்டுரையைப் படித்துவிட்டு, அவரின் பாராட்டை ஒரு விரல் மூலம் தெரிவித்தார். அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ஆம் அவர் புதியவர்களையும், எளியவர்களையும் அரவணைத்து செல்பவர் என்பதில் மாற்று கருந்து இல்லை.
திருக்குறள்
கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.
தாஜூதீன்