
2020ஆம் ஆண்டு அனைவருக்கும் மிகவும் கடினமான ஒரு ஆண்டாக இருந்தது என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. அப்படி அனைத்து தரப்பினர்களுக்கும் கொரோனா என்கின்ற உயிர்க்கொல்லி நோய் வாட்டி வதைத்தது என்று சொல்லலாம். பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிய காலகட்டம். இப்படி பல துன்பங்கள் இருந்தாலும், ஒரு சில (விரல் விட்டு என்னும் அளவுக்கு) நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது.
என் பார்வையில், முக்கிய நன்மைகள்.
இயற்கை மருந்தை ஊக்குவித்தது (வீட்டில் இருக்கும் பொருட்களை மருந்தாக மாற்றியது)

இந்த நவீன காலகட்டத்தில் நம் முன்னோர்களின் வழிமுறைகளை பலவற்றை மறந்து இருக்கிறோம் அவற்றில் முதன்மையான ஒன்று இயற்கை மருந்து.
நம் உடலில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கும், அருகில் இருக்கும் மருத்துவரை அணுகுவதை வழக்கமாகக் கொண்ட நமக்கு, இந்த கொரோனா காலத்தில், அப்படியான பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகாமல் (மருத்துவர்கள் நம்மை அணுக மறுத்ததினால்), வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்களை வைத்துக்கொண்டு வீட்டு (பாட்டி வைத்தியம்) வைத்தியம் செய்யவைத்தது.
இதற்கு ஒருபடி மேலே சென்று, பலபேர் இந்த கொரோனவையே, வீட்டு வைத்தியத்தினால் தங்களை அணுகாமல் பார்த்துக் கொண்டார்கள் என்பதுதான் தனிச்சிறப்பு.
எளிமையான திருமணங்கள்

திருமணங்கள் அவர்களின் குடும்பத் (ஆண் மற்றும் பெண் வீட்டார்) தகுதியை அடுத்தவர்களுக்கு பறைசாற்றுவதாக மாறிப்போன இந்த காலத்தில், அதுவும் பணம் படைத்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும், ஆடம்பர திருமணம் என்பது அவர்களின் குடும்ப மரியாதை சம்பந்தமாக மாற்றி அதற்கு செய்யும் செலவுகள் விண்ணைத் தொட்டு கொண்டிருக்கிறது.
ஆனால் இந்தக் கொரோனாவினால் திருமணங்கள் எளிமையான ஒன்றாக மாறிப்போனது (நம் முன்னோர்கள் காலத்தில் நடைபெற்ற திருமணங்கள் போன்று). இரு குடும்பத்தார்கள் மற்றும் மிக முக்கியமான உறவினார்கள் (பலருக்கு யார் உண்மையான உறவினார்கள் என்பது இப்பொழுது தெரிந்திருக்கும்) வாழ்த்துக்களுடன் தங்களின் இல்லங்களில் அல்லது அருகில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் திருமணங்களை எளிமையாக (நிம்மதியாக) நடைபெற்றது.
2020ல் நடைபெற்ற திருமணங்கள் போன்று, இனிவரும் காலங்களிலும் எளிமையான திருமணங்கள் நடைபெற்றால் நல்லதே.
காற்று மாசு குறைந்தது

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்வதை நிறுத்திவைத்தது இந்த கொரோனா காலம். நம்மை பெரும்பாலும் கற்காலத்துக்கு கொண்டு சென்றது என்றே சொல்லலாம். பயணத்துக்கான அனைத்து வசதிகளும் இருந்தும், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, நம் வீட்டிலேயே இருக்க வைத்தது. அவரவர் வாழ்விடங்களை நோக்கி நகர்த்தியது இந்த கொரோனா. பயணங்கள் குறைந்ததினால், தற்காலிகமாக காற்று மாசு குறைந்து, சுவாசிக்கும் காற்றின் தன்மை மேம்பட்டது.
மேலும், சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் பல மடங்கு இந்த காலகட்டத்தில் குறைந்து உள்ளது என்கிறது ஆய்வறிக்கை.
பணவிரயம் கட்டுப்பட்டது

சந்தைக்கு குடும்பத்துடன் சென்று வாரத்திற்க்கு தேவையான வீட்டுக்கு பொருட்களை குறைந்த விலையில் வாங்கிக் கொண்டிருந்த நம்மை, குடும்பத்துடன் மால்களுக்கு வரவழைத்து அதிக விலையில் பொருட்களை வாங்கவைத்தது. அது மட்டுமின்றி, மால்களில் வாங்குவதுதான் கவுரவம், நாகரிகம் என்று நம்மை நம்பவைத்து இந்த நவீன காலம். இவற்றில் இருந்து நம்மை தள்ளி வைத்து, நம் வீட்டின் அருகிலேயே நமக்கு தேவையான பொருட்களை வாங்க வைத்தது இந்த கொரோனா காலம்.
பண்டிகை காலங்களில் மட்டும் புதிய திரைப்படங்களை, குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்த நம்மை, வாரம் ஒரு புதிய திரைப்படங்கள் பார்ப்பது என்று மாற்றிக்கொண்டு இருந்தது இந்த நவீன காலம். இவற்றைகளை கட்டுப்படுத்தி, குடும்பத்துடன் வீட்டிலேயே புதிய திரைப்படங்களை பார்க்கவைத்தது இந்த கொரோனா காலம்.
இப்படியான, ஒரு சில நன்மைகளை மறுபடியும் நமக்கு ஞாபகப்படுத்தி உள்ளது. இயற்கையுடன் எப்படி வாழ்வது என்று ஒரு கடினமான பாடத்தை நமக்கு சொல்லிக் கொடுத்து உள்ளது இந்த கொரோன.
இனியாவது நம்முடைய வாழ்வியலை குறைந்தபட்ச இயற்கையுடன் அமைத்துக் கொள்வோம்.
நன்றி.
இந்த கொரோனா காலத்தில், உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிரவும்.