
ஜெய்பீம் திரைபடத்தின் மூலம் தான் சார்ந்த சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்று நடிகர் சூர்யாவுக்கு ஒன்பது கேள்விகளையும் மற்றும் நேரடி மிரட்டலுமாக நீண்ட கடிதம் எழுதியுள்ளார் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள்.
அந்த கடிதத்தின் சுருக்கம் மற்றும் மிக முக்கியமானது, படத்தில் இரண்டு தவறுகளை சூட்டிக் காட்டுகிறார். ஒன்று அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருப்பது. மற்றொன்று, படத்தின் காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் குருமூர்த்தி என்று பெயர் சூட்டியது (உண்மையான நிகழ்வில் அந்தோணிசாமி என்பது தான் ஆய்வாளரின் பெயர்). இந்த இரண்டு குறியீடுகளை கண்டித்துள்ளார்.
மேலும், திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள் கடிதத்தின் மூலம் தன்னுடைய கோபத்தினை கீழேயுள்ளவாறு வெளிப்படித்தியுள்ளார்.
நீங்கள் விரும்பினால் பெருமைமிக்க உங்களின் கவுண்டர் சமுதாயத்தை போற்றும் வகையில் திரைப்படம் தயாரித்து வெளியிட்டுக் கொள்ளலாம்.
இன்னொரு சமுதாயத்தை, படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை. இதை உங்களுக்கு மட்டுமல்ல…. இன்னொரு சமுதாயத்தை இழிவுபடுத்தி தங்களின் சாதிவெறிக்கு தீனி போட நினைக்கும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்தப் படத்தில் நீங்கள் உங்களின் வன்மத்தைக் காட்டினால், அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும்.
இதற்கு நடிகர் சூர்யாவும் தன் பங்குக்கு பதில் கடிதத்தை திரு. அன்புமணிக்கு எழுதியுள்ளார். அதில்
கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தங்கள் அறீவீர்கள் என நினைக்கிறேன்.
படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன். அதேபோல, படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்தை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.
இதில் யாருடைய கருத்து சரி மற்றும் தவறு என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை, இதில் யார் எந்தப் பக்கத்தில் இருக்கிறார்கள் என்று பொறுத்து தங்களுடைய கருத்து மற்றும் கோபம் வெளிப்படும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
திரெளபதி மற்றும் ருத்ர தாண்டவம்
திரைப்படத்தில் காட்டப்பட்ட சமுதாய குறியீடுகள்,
விஸ்வரூபம்
திரைப்படத்தில் காட்டப்பட்ட மத குறியீடுகள்,
அவ்வை சண்முகி
திரைப்படத்தில் காட்டப்பட்ட மாமி குறியீடுகள்
ஆகியவைகள், எந்த சமுதாயத்தை மற்றும் மததை இழிவுபடுத்துகிறது மற்றும் படைப்பு சுதந்திரம் ஆகிய இரண்டும், யார் பக்கத்தில் இருக்கிறது பொறுத்து தங்களின் கருத்து மற்றும் கோபம் மாறுபடுகிறது.
திரைப்படத்தில் காட்டபடும் குறியீடகள், மற்றவர்களை இழிவுபடுத்தாமல் இருக்கவேண்டும் என்பதனை படைப்பாளிகள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதுதான் இதன் மூலம் நமக்கான படிப்பினை.