14-Nov-2021
சில வருடங்களாக பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு ஆசிரியர்களினால் பாலியல் தொல்லைகள் கொடுப்பது தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது. இதில், பெண் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சில தினங்களுக்கு முன், கோவையில் 12-ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த குழந்தையை தற்கொலைக்கு தள்ளியிருக்கிறான் ஆசிரியர் என்கின்ற போர்வையில் மிதுன் சக்ரவர்த்தி என்கின்ற கொடூரன்.

கடந்த ஆறு மாசமா என் பிள்ளைக்கு அந்த ஆசிரியரால் தொல்லை இருந்திருக்கு. நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டோம். பஸ்ல போகும்போது ரெண்டு பேர் இடிச்ச மாதிரி நெனச்சிக்கிட்டு விட்டுடுங்க. பெரிதுபடுத்தினா, உங்க பேரும் கெடும்னு சொல்லி பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கல. என் மகள் அடிக்கடி வீட்டில் அழுதுட்டு இருப்பா. ஏன்னு கேட்ட ஒன்னுமில்லம்மான்னு சொல்லிட்டு போயிடுவா. பச்சை மண்ணு அவ, இப்படி எங்கள தவிக்க விட்டு போயிட்டா என்று கதறி துடித்துள்ளார், மானவியின் தாயார்.

இந்த நிகழ்வில் சின்மயா வித்யாலயா பள்ளியின் முதல்வரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது, அந்த குழந்தைக்கு நடந்த கொடுமை தெரிந்து இருந்தும், அதை மூடிமறைக்கப் பார்த்தது மட்டுமின்றி அந்த குழந்தையையே குற்றவாளியாக மாற்றியது, மன்னிக்க முடியாத குற்றம். பள்ளியின் முதல்வர் நேர்மையாக செயல்பட்டிருந்தால், இந்த குழந்தையின் தற்கொலையை தவிர்த்திருக்கலாம். இதில், அந்த ஆசிரியருக்கு கொடுக்கும் தண்டனையை விட பல மடங்கு அந்த பள்ளியின் முதல்வருக்கு தான் கொடுக்கவேண்டும். இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.
அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் ஒரு வேண்டுகோள்
குழந்தைகளின் பாலியல் வழக்குகளை விரைந்து விசாரித்து, குற்றம் நிருபமான குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை விரைந்து கொடுங்கள். அப்போதுதான் இப்படியான குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது.
குழந்தைகளுக்கு ஒரு வேண்டுகோள்
முதலில் நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும், பாலியல் தொல்லையினால் அவமானம் நமக்கு இல்லை, நம் எதிரில் இருப்பவனுக்கு தான்.
இப்படியான நிகழ்வுகள் நடக்கும் அதே சமயத்தில் உங்கள் எதிர்ப்பை கடுமையாக காட்டுங்கள், அப்படி முடியவில்லையென்றால் அங்கேயே கூச்சலிடுங்கள், உங்கள் அருகில்யுள்ள பல சகோதரர்கள், சகோரிகள், அப்பாகள் மற்றும் அம்மாக்கள் உன்னுடைய கரம் பிடிக்க ஒடிவருவார்கள். அதுமட்டுமின்றி, இப்படியான நிகழ்வை நடத்தத் துடிக்கும் கயவர்களுக்கு அங்கேயே அவமானத்தையும், தண்டைனயும் கொடுப்போம்.
இந்த குழந்தைக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள்.